Wednesday, November 12, 2025

இட்லியை தேடி ...



நான் சாப்பிட்ட சிறந்த "சில" இட்லிகள்...

கோவை பீளமேடு ஆர்யாஸ் சாம்பார் இட்லி - வெஜிடேரியன் நண்பரும் நானும் அடிக்கடி சென்று சாப்பிடும் சாம்பார் இட்லி. மினி இட்லி இல்லாமல் பெரிய இட்லியை சாம்பாரில் முக்கி, இரண்டு ஸ்பூனும், ஒரு குட்டி குவளையில் தேங்காய் சட்னியும் கிடைக்கும். எவ்வளவு இடத்தில சாம்பார் இட்லி சாப்பிட்டாலும் பீளமேடு ஆர்யாஸ் சுவை இன்னும் கிடைக்கவில்லை. அனேகமாக இரண்டு பிளேட் சாம்பார் இட்லி சாப்பிடும் வெகு சிலரில் நாங்களும் அடக்கம் 

திருவாரூர் வேல்முருகன் இட்லி கடை - பள்ளி நாட்களில் பெரும்பாலும் ஹோட்டல் சாப்பாடு என்றால் அது தெற்குவீதி வேல்முருகன்தான். மிக குறைவான விலையில், மிகவும் சுகாதாரமாக உணவு கிடைக்கும். காலை இரவு இட்லி இவர்கள் ஸ்பெஷல். அவர்கள் போடும் இலையிலேயே சுத்தம் தெரியும். ஆறிப்போன உணவு என்பது இவர்களின் அகராதியிலேயே கிடையாது,  அடுப்பில் இருந்து நேராக நமது இலைக்கு ஆவியுடன் வரும். சாம்பாரும் சட்னியும் எங்கும் கிடைக்காத சுவையில் இருக்கும். இரவில் உண்மையான கார சட்னி கிடைக்கும் (இப்போது கார சட்னி என்றாலே சிகப்பான தக்காளி சட்டினிதான் எங்கும் கிடைக்கிறது). சூடான இட்லியுடன் வேல்முருகன் ஹோட்டல் சாம்பார் டிவைன்...இரண்டு பேர் வயிறார சாப்பிட்டாலும் 30 ரூபாய்  தாண்டாது (@1998), எவ்வளவு கூட்டம் இருந்தாலும் முகக்கோணல் இல்லாமல் உபசரிப்பார்கள்.

முருகன் இட்லி கடை பொடி இட்லி - பேச்சுலர் வாழ்க்கையின் போது டீ-நகரில் இருந்ததால், அங்கு, முதன் முதலில் ஆரமிக்கப்பட்ட முருகன் இட்லி கடையில் அடிக்கடி சாப்பிடுவது உண்டு. 5 வகை சட்னி இருந்தாலும் நம் கண் எப்போதும் பொடி மீதுதான். அப்போது பொடி தோய்த்த இட்லி கிடையாது (இப்போது கிடைக்கிறது), இட்லியும் பொடியும் தனியே வாங்கி, அவர்கள் கொடுக்கும் லிமிடெட் நல்லெண்ணெயில் மிக்ஸ் செய்து சாப்பிட்டால்,இரவு 9 மணிக்கு சொர்கம் தெரியும். இட்லியின் மிருதுத்தன்மை இவர்கள் ஸ்பெஷல். பொடியின் காரத்துடன் வெளியே வந்தால் ஜிகர்தண்டா கிடைக்கும். இரண்டும் டிவைன்

கணபதி மெஸ் - PSG இல் படிக்கும்போது, அடிக்கடி செல்லும் இடம் கணபதி மெஸ். கல்லூரியின் பின்புறம் இருக்கும். இட்லியுடன் அசைவ சைடு குழம்புகள் இங்கு இருக்கும். பெரும்பாலும் குழம்புகளுக்கு  தனி விலை கிடையாது. இட்லிக்கெல்லாம் லிமிடெட் குழம்பு கான்செப்ட் செட் ஆகாது. பாரம்பரிய முறையில் பிய்த்து, நசுக்கி, குழம்புகளுடன் கலந்து ஒரு செமி சாலிட் ஸ்டேட்டில் சாப்பிட்டால்தான் அதற்கு நாம் தரும் மரியாதை. அதை இங்கே செய்யமுடியும். விலை குறைவாக, சுவை நிறைவாக இருக்கும். ஒரு குறை, பெரும்பாலும் அப்போது சூடாக கிடைக்காது.

லட்சுமி சாகர் ஹோட்டல் சேலம் - அருமையான ஒரு காலை உணவு, சேலத்தில் இங்கு கிடைக்கும். மிகவும் தரமாக உணவு தருவார்கள். இவர்கள் தரும் ஒருவித அரைத்துவிட்ட சாம்பாரை பார்ப்பதற்கே அருமையா இருக்கும். சுவையும் அருமை. நான் பலமுறை சாப்பிட்டாலும், இட்லி பிசிர் இல்லாமல் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும். கெட்டி சட்னி கேட்டால் முறைக்கும் இந்த சமூகத்தில், எப்போதும் கெட்டி சட்னி கிடைப்பது இங்கு சிறப்பு 

திருவாரூர் பகுதியில் அடையாளங்களில் ஒன்றான வாசன் - இப்போது 3-4 பிரான்ச் வந்துவிட்டாலும், திருவாரூர்-கடைத்தெரு பகுதியில் விஜயபுரத்தில் இருக்கும் கடையில் சாப்பிட்டால் ஒருவித நாஸ்டாலஜி பீலிங் வரும். காலை 4 மணிக்கே சுட சுட இட்லியும் அருமையான வாசத்தில் சாம்பாரும் அருமை அருமை. சாம்பார் இவர்களின் சிறப்பு. இரண்டுமுறை சென்றால் கூட தெரிந்துவைத்துக்கொண்டு கவனிக்கும் பணியாளர்கள் இவர்களின் மற்றுமொரு சிறப்பு 

மும்பை செம்பூர் நாக்கா வண்டிக்கடை இட்லி - மும்பையில் வேலை செய்தபோதுதான் தெரிந்தது, இட்லி எவ்வளவு பெரிய பிசினஸ் என்று. மும்பை இட்லி நமக்கு வெறுத்துவிடும். வெங்காயம் இல்லாத சாம்பார், காரம் இல்லாத சட்னி போர் அடித்துவிடும். எதேச்சையாக நான் கண்டுபிடித்த ஒரு தள்ளுவண்டி கடையில் இதற்கு நேர்மாறாக இருந்தது. காரமாக சாம்பார், அருமையான காரத்தில் தக்காளி சட்னி அடி தூள் என்று இருந்தது. நான் சாப்பிட்ட ஒன் ஆப் தி பெஸ்ட் தக்காளி சட்னி இந்த தள்ளுவண்டி கடையில்  

பெங்களூரு ரவா இட்லி - பெங்களூரு ஈட்-அவுட்ஸ் எனக்கு பிடிக்கும். சுத்தமாக அதே சமயம் அடக்கமான விலையில் கிடைக்கும். சாதாரன  இட்லிக்கு அவர்கள் இனிப்பு சேர்த்து செய்த சாம்பார் தருவார்கள். நம் ஊர் காரர்களுக்கு அது செட் ஆகாது, அனிருத் பாடலுக்கு பவர் ஸ்டார் டான்ஸ் ஆடினால் எப்படி ஓட்டதோ அதே போல் நமக்கும் ஒட்டாது. அனால் அவர்களின் ரவா இட்லி அருமையாக இருக்கும். பெரும்பாலும் அனைத்து ஈட்-அவுட்'களிலும் நல்ல சுவையுடன் கிடைக்கும். அனால் இதற்கு அவர்கள் தரும் குருமாவுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், சாம்பார் பக்கம் போனால் அபாயம் 

கடைசியாக எங்கள் வீட்டில் செய்யும் இட்லியும், பச்சை வெங்காயத்தில் செய்யப்படும் சட்னியும். இந்த சட்னியுடன் சாப்பிடும்போது லேசாக கண் எரியும். தண்ணியான வெங்காய சட்னி, இட்லியை பெரும்பாலும் கரைத்துவிடும். சுவை அருமையாக இருக்கும். எங்கள் ஊர் பகுதியில் இட்லிக்கு ஸ்பெஷல் ஐட்டமாக கடப்பா என்று ஒரு சைடு டிஷ் கிடைக்கும். கடப்பா என்பது veg உணவில் நான்-வெஜ்  வாசனைகளை இன்-ஃபியூஸ் செய்த ஒரு குழம்பு. சுவை அலாதியானது. அனால் பெரும்பாலும் தஞ்சை-டெல்டா தாண்டினால் கிடைக்காது.இட்லியும் ஒரு நல்ல சாம்பாரும் டிவைன் என்றால், இட்லியும்-கடப்பாவும் ஹெவன்லி-டிவைன்.

இட்லி என்பது ஒரு உணவுமட்டும் அல்ல, அனைவருக்கும் கிடைப்பதால் அது பொதுவுடைத்தன்மையின் ஒரு அடையாளம்

No comments:

Post a Comment